இலங்கையின் செல்லப்பிள்ளை மோடி : ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

இலங்கையின் செல்லப்பிள்ளை மோடி : ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு இலங்கையின் செல்லப்பிள்ளை மோடி : ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
Watch the video

மீனவர் படுகொலைக்கு மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்கு பிரதமர் மோடியே பொறுப்பேற்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயது மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கொலையுண்ட பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

2011 ஏப்ரல் மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அப்போது ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 4 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். இதன் பிறகு முதன் முறையாக நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்திய மீனவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ள பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.

2014 ஜனவரி 31 அன்று தங்கச்சிமடத்தில் பாஜக சார்பாக நடைபெற்ற கடல் தாமரை போராட்டத்தில் பங்குகொண்டு பேசிய சுஷ்மா சுவராஜ் (அன்றைய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் இன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர்) தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிரந்தர தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது ராமநாதபுரத்தில் ஏப்ரல் 17, 2014-ல் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி தான் குஜராத்தைச் சேர்ந்தவர் என்றும், தான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பேன் என்று பேசினார்.

மீனவர்களுக்காக பாஜக தலைவர்கள் பேசியவை அனைத்தும் வெறும் வார்த்தை ஜாலங்கள்தான் என்பதை, பாதியளவு ஆயுளை முடித்துவிட்ட மோடி அரசின் நடவடிக்கைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இதன் ஒரு வெளிப்பாடாகவே மீனவர் பிரிட்ஜோவின் கொலை அமைந்துள்ளது.

மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இதுவரை இலங்கை அரசினால் கைப்பற்றப்பட்ட ஒரு படகைக் கூட அவரால் மீட்க முடியவில்லை. எங்கள் வசம் 130 இந்திய மீனவர்களின் படகுகள் உள்ளன, அவற்றை விடுவிக்க மாட்டோம் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் திமிராகப் பேசிவருகிறார்.

தன்னை வலிமையான பிரதமர் என்று சொல்லிக் கொள்ளும் மோடியினால் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இயலாத சூழலில் அதன் உச்சமாக இன்று ஒரு மீனவரின் உயிரை நாம் பலி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மீனவர் பிரிட்ஜோவின் கொலைக்கு மோடிதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளபடி, மத்திய அரசு அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அரசு வேலையும் கொடுக்க வேண்டும்.

மீனவர் பிரிட்ஜோவின் உயிரிழப்பை ஒரு கொலை வழக்காக பதிவுச் செய்வதற்கு உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் நலனில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசிற்கு உண்மையான அக்கறை வரும் வரையில் மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படாது.

எனவே தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.